கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் மன உறுதியுடன் வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில், மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்; எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும். தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி, உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்." இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

