தூத்துக்குடி மாவட்டம் சிவராமமங்கலத்தைச் சேர்ந்த வீரசெல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது, வீரபாண்டியபட்டினம் புனித தோமையார் அப்போஸ்தலர் தேவாலயத்திற்குச் சொந்தமாகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள நிலத்தைச் சுப்பையா என்பவருடன் இணைந்து, போலி அதிகாரப் பத்திரத்தைச் சமர்ப்பித்து, வழிகாட்டு மதிப்பீட்டைக் குறைத்துப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த சொத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாகத் திருச்செந்தூர் போலீசாரிடம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இப்புகார் மீது விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்னும் 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று திருச்செந்தூர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.