உலகம் முழுவதும் முதியவர்களை அச்சுறுத்தும் ஞாபக மறதி நோயான 'அல்சைமர்' நோய் குறித்த விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக அல்சைமர் தினத்தை ஒட்டி நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பாலிவுட் நடிகை லாரா தத்தா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது 80 வயது தாயார் கடந்த 10 ஆண்டுகளாக அல்சைமர் மற்றும் டிமென்ஷியா தீவிர பாதிப்புடன் வாழ்ந்து வருவதாக உருக்கமாகத் தெரிவித்தார். அத்துடன், திறமையான மருத்துவர்களின் வழிகாட்டுதல், உரிய பராமரிப்பு மற்றும் குடும்பத்தினரின் வலுவான ஆதரவு அமைப்புகள் மூலமாகவே தனது தாயாரை இத்தனை காலம் தங்களால் நன்றாகப் பராமரிக்க முடிந்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய லாரா தத்தா தெரிவித்ததாவது:"அல்சைமர் என்பது வெறும் சாதாரண மறதி நோய் மட்டுமல்ல. நமது அன்பிற்குரியவர்களிடம் அல்லது நம்மிடமே கூட சிந்தனை மற்றும் நினைவாற்றலில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், அதனை வயதானதற்கான இயல்பான பிரச்சினை என்று நினைத்து 5 ஆண்டுகள் காத்திருக்கக் கூடாது.

ஆரம்ப நிலையிலேயே இது பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்க வேண்டும். இது போன்ற பாதிப்பிற்கு ஆளானவர்களை அரவணைத்துப் பாதுகாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும்" என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.