தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சங்கிலி வீரன் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (70). கூலித் தொழிலாளியான இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்குத் திருமணமாகிவிட்ட இரு மகள்கள் உள்ளனர். முனியம்மாளின் தங்கை முத்துலட்சுமி (55). கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத இவர், ஊட்டியில் வசித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அக்கா முனியம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அக்காவின் 30-ஆம் நாள் காரியங்கள் முடியும் வரை ஊரில் இருக்குமாறு உறவினர்கள் கூறியதால், முத்துலட்சுமி வாசுதேவநல்லூரில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், நடராஜன் தனது மறைந்த மனைவியின் தங்கையான முத்துலட்சுமியிடம் தொடர்ந்து ஊரிலேயே தங்குமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த நடராஜன் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து முத்துலட்சுமியைக் கொடூரமாக வெட்டியுள்ளார்.
முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டுப் புளியங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நடராஜன் நேரடியாக வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறிச் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உயிரிழந்த முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

