சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் வைத்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவர்களை உடனே விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்குப் போராடச் செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஒனர்களின் பாணியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் வைக்கும் இந்த சோபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டுக் காவலில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?

விவசாயிகள் - மாணவர்கள் - செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

மருத்துவப் பணியாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டம்மி முதல்வர் முன்வர வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.