ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் சோலைராஜிற்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஏ. குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ் (31). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது தனது 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 2018-ல் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுத் தனது இடது காலினை இழந்தார்.

இருப்பினும் மனம் தளராமல் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கவனம் செலுத்தித் தடகள வீரரானார். கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் T64 பிரிவில் 6.80 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது ஜப்பானின் நாகோயா நகரில் நடைபெற்று முடிந்துள்ள 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மீண்டும் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சோலைராஜிற்கு முத்துப்பிரியா என்ற மனைவியும் தர்ஷிகா ஸ்ரீ, தாரிகா என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

போட்டிகள் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பிய தடகள வீரர் சோலைராஜிற்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சடையாண்டி ஆகியோர் நேரில் சென்று சோலைராஜிற்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தடகள வீரர் சோலைராஜ்: "தொடர்ச்சியாக 2-வது முறை தங்கம் வென்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தபோதிலும், கடந்த போட்டியை விட இந்த முறையில் எனது செயல்பாடு சற்றே குறைவாகத்தான் இருந்தது. அதனைச் சரிசெய்து அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படப் பயிற்சி எடுத்து வருகிறேன். அடுத்த ஆண்டு வரவுள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே எனது அடுத்தகட்ட இலக்கு" என்று கூறினார்.

இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக மாவட்டத் துணைச் செயலாளர் எபனேஸர், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீ பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், தங்க மாரியப்பன், வழக்கறிஞர் அணி சண்முகராஜ் உட்படத் தவெக மற்றும் விசிக நிர்வாகிகள், ஊர்ப் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.