தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் இன்று (28.10.2026), 2026–ஆம் ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவபிரசாத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா 2026 ஆனது நவம்பர் 10 முதல் 21, 2026 வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகளாக சூரசம்ஹாரம் 15.11.2026 (ஞாயிறு) அன்றும், திருக்கல்யாணம் - 16.11.2026 (திங்கள்) அன்றும் நடைபெறவுள்ளது.

திருவிழா காலமான 12 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவின் உச்சக்கட்ட நாட்களில் ஒரே நேரத்தில் நகருக்குள் சுமார் 5 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் துறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக 4,298 காவல் துறைப் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் 5 கண்காணிப்பாளர்கள் (SPs). 16 கூடுதல் காவல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 50 டிஎஸ்பிக்கள் அடங்குவர். கோயில் வளாகத்திற்குள் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். மொத்தம் 493 சிசிடிவி (CCTV) கேமராக்கள் (384 நிரந்தர மற்றும் 109 தற்காலிகக் கேமராக்கள்) மற்றும் 26 எல்இடி (LED) திரைகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகளும் பாதுகாப்பும் உருவாக்கப்படும்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 17 போக்குவரத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, அவசர கால ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்குத் தடையற்ற வழிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிடம் (Parking) தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களிலிருந்து வழக்கமான பேருந்துகளுடன், இதர கழகங்களிலிருந்து 135 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 302 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் சென்னை மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜே.ஜே. நகர் (4,500 வாகனங்கள்), வியாபாரிகள் சங்கம் (2,500 வாகனங்கள்) மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 12 இடங்கள் மூலம் சுமார் 10,000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்கேற்ற சீரான குடிநீர், சுகாதாரம் மற்றும் தற்காலிக வசதிகள் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் நவம்பர் 10 முதல் 15 வரை தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது. அதேப்போல் நகராட்சி நிர்வாகம் சார்பில் 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்படவுள்ளது. அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நடைபாதைகள் அமைக்கப்படும்.

தூய்மைப் பணிகள் தொடர்பாக திருநெல்வேலி மண்டலத்திலிருந்து வரவழைக்கப்படவுள்ள பணியாளர்கள் உட்பட நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் 130-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கோயிலின் சார்பில் 325 நிரந்தர மற்றும் 300 தற்காலிகக் கழிப்பறைகளும், நகராட்சி சார்பில் 9 நிரந்தரக் கழிப்பறைகளும் (100 இருக்கைகள்) பயன்பாட்டிற்கு உள்ளன. கழிவுநீர் அகற்ற 3 சூப்பர் சக்கர் (Super Sucker) இயந்திரங்கள் தயாராக உள்ளன.

மருத்துவம் மற்றும் அவசர கால சேவைகள் சார்பாக கோயில் நுழைவு வாயில், நாழி கிணறு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், நவம்பர் 12 முதல் 15 வரை 24 மணி நேரமும் இந்த முகாம்கள் இயங்கும். பக்தர்களுக்கு வழங்க 15 இடங்களில் ஓஆர்எஸ் (ORS) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்கு 6 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

கடலோர பாதுகாப்பு சார்பாக கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடலோர பாதுகாப்புப் படை (75 பேர்), மீன்வளத்துறை மற்றும் மீனவ தொண்டர்கள் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மிதவைகள் (Floats) மூலம் பாதுகாப்பான எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தீயணைப்புத் துறை சார்பாக திருச்செந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர்தாங்கிகள் (Water Tenders) முக்கிய சந்திப்புகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இன்றையதினம் திருக்கோவிலில் வைத்து இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளோம். எனவே, இத்திருவிழாவினை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தெரிவித்தார். தொடர்ந்து, திருக்கோவிலின் கடற்கரை பகுதியினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

tcrAivumeeti.jpg

இந்நிகழ்வில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அருணாச்சலம் (திருச்செந்தூர்), செல்வி ரோஜா லி சுமேதா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், துணை காவல் கண்காணிப்பாளர் (திருச்செந்தூர்) மகேஷ்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபாகர், செல்வராஜ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.