எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தைக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதிலும் காவல்துறை காட்டவில்லை என்று கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "குற்றங்கள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டுவது எங்களது கடமை. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அரசியலில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

காவல்துறை தவெகவின் ஐடி விங் போலச் செயல்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர். அதுமட்டுமின்றி, தவெக நிர்வாகிகள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்ச் டயலாக் பேச மட்டும் தான் முதல்வர் வாயைத் திறப்பார்.. வேறு எதற்கும் விளக்கம் தராத ஒரு முதல்வர் தான் நம்முடைய முதல்வர் விஜய். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தைக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதிலும் காவல்துறை காட்டவில்லை என்பதுதான் உண்மை" என்று குற்றம் சாட்டினார்.