விளாத்திகுளம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை நாயக்கர் என்பவரின் மகன் முருகன் (52). இவர் சூரங்குடியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சென்னைக்குச் செல்வதற்காகச் சூரங்குடியில் இருந்து ராமேஸ்வரத்திலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்காக ஏறியுள்ளார்.

பேருந்து விளாத்திகுளம் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, முருகனுக்குத் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாகக் கவனித்த பேருந்து ஓட்டுநர், சமயோசிதமாகச் செயல்பட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மற்ற பயணிகளை அவசர அவசரமாக இறக்கிவிட்டார்.

தொடர்ந்து, முருகனை மீட்கும் பொருட்டு அதே அரசுப் பேருந்தை நேரடி ஆம்புலன்ஸ் போலப் பயன்படுத்தி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரும் நடத்துனரும் விரைந்து செயல்பட்டுப் பேருந்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், பயணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.