தூத்துக்குடி 3வது மைல் கந்தன் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது மனைவி சசிகலா (45). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் சென்னையில் வசித்து வரும் நிலையில், திருமணமாகிவிட்ட மகன் தனியாக வசித்து வருகிறார்.

கணவர் சித்திரைவேல் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், சசிகலா மட்டும் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த சசிகலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மேலும், அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினையும் மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகலாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சம்பவ இடத்தைத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் டவுன் டிஎஸ்பி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சசிகலாவைக் கொலை செய்தது யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்துத் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். வீடுபுகுந்து பெண் வெட்டிக் கொல்லப்பட்டு, நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.