தமிழ்நாட்டில் பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை எளிதாக இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று போக்குவரத்துத் துறை சேவைகள் தொடர்பாக 110-ஆவது விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், பொதுமக்கள் நலன் கருதி பல முக்கிய மாற்றங்களை வெளியிட்டுப் பேசியதாவது: மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் (Digital DL & Digital RC) வழங்கப்படும்.
ஓட்டுநர் தேர்வில் (Driving Test) வெற்றிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமே இணையம் வழியாக டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். மின்னணு வாகனப் பதிவுச் சான்றிதழ் முறை மூலமாக, புதிய வாகனம் வாங்குவோர் உடனடியாக இணைய வழியிலேயே தங்களது பதிவுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய டிஜிட்டல் முறையின் மூலம் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவணங்களை இணைய வழியாகவே எளிதில் சரிபார்க்க முடியும். இதனால் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், அசால்ட்டாக ஆவணங்கள் தொலைந்தாலும் ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் (RTO) பொதுமக்கள் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறை வசதிகள் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

