தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாகச் சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளார்.
விழாவில் 5 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்தமைக்கான நூலுரிமைத் தொகை வழங்கப்படும். திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த தமிழ்ப்பணியாற்றிய 76 அறிஞர்களுக்குத் 'தமிழ் செம்மல்' விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட உள்ளது.

