புதுக்கோட்டை அருகே 6 மாத கர்ப்பிணிப் பெண் கழுத்து நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மாமியார், நாத்தனார் உட்படக் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை நிதானமாகக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை; இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், சந்தியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 29-ஆம் தேதி பாண்டித்துரை வேலை நிமித்தமாக ஈரோட்டிற்குச் சென்றுள்ளார்.
மறுநாள் சந்தியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அவரது கணவர் குடும்பத்தினர் அவரைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சந்தியாவின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்த நிலையில், அவரது மரணத்தில் காயங்கள் இருந்ததைக்கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நாத்தனார்களின் நடவடிக்கைகள் குறித்துத் தனது கணவரிடம் சந்தியா கூறியதால் ஆத்திரமடைந்த மாமியார் பானுமதி (46), நாத்தனார்கள் பாண்டி மீனா (33), பொற்கொடி (29), கணவரின் அத்தை கனிமொழி (27), மாமனாரின் சகோதரி செல்வி (38) மற்றும் அவரது மகன் கார்த்திக் (24) ஆகிய 6 பேரும் சேர்ந்து, சுடிதார் துப்பட்டாவால் சந்தியாவின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை மூடியும் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர், பிரெட் சாப்பிடும்போது தும்மல் ஏற்பட்டுச் சந்தியா மயங்கி விழுந்துவிட்டதாக மருத்துவமனையில் பொய்யான தகவலைக் கூறி நாடகமாடியதும் அம்பலமானது. 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாகக் கொலை செய்த மாமியார் பானுமதி உள்ளிட்ட 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

