பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த விவசாயி ஒருவருக்கு, தீபாவளி பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் டேராபஸ்ஸி அருகேயுள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பல்ஜிந்தர் சிங். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்தார். இதுவரை அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்காத போதிலும், என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தொடர்ந்து டிக்கெட் வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளியையொட்டி 'பஞ்சாப் மாநில டியர் தீபாவளி பம்பர் லாட்டரி 2026'-ன் கீழ் விற்பனை செய்யப்பட்ட ரூ.500 மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டை பல்ஜிந்தர் சிங் வாங்கினார். இதன் குலுக்கல் முடிவுகள் கடந்த திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பரிசான ரூ.12 கோடியை பல்ஜிந்தர் சிங் வென்றது தெரியவந்தது.
இந்த வெற்றி பல்ஜிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அவர் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி அலுவலகத்திற்குச் சென்று, பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளைப் பூர்த்தி செய்தார். விவசாயி ஒருவர் ரூ.12 கோடி பரிசு வென்ற செய்தி ஹுமாயுன்பூர் கிராமத்தில் காட்டுத்தீ போலப் பரவியதையடுத்து, கிராம மக்கள் அவரது வீட்டிற்குத் திரண்டு வந்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக, லாட்டரி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பல்ஜிந்தர் சிங், "இறுதியாக, கடவுள் என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்துவிட்டார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி" என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், இந்தப் பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, "எனது இரண்டு பிள்ளைகளின் கல்விக்காகக் கணிசமான தொகையைச் செலவிடுவேன்" எனத் தெரிவித்தார்.

