தொழில் உறவுகளை வலுப்படுத்துவது, ஏற்கனவே இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் உலகத்தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவையே முதலமைச்சர் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கங்கள் எனத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் ₹8,491 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளன. இதன் மூலம் சுமார் 5,690 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல், நிதி சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் நீண்டகாலமாகத் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இத்தகைய தொழில் உறவுகளை மேலும் வலுப்படுத்தி, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இப்பயணத்தின் பிரதான நோக்கமாகும்.
தமிழகத்தில் உலகத்தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு அதன் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' வளாகத்தை முதலமைச்சர் பார்வையிட உள்ளார்.
முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சென்னையில் இருந்து நேற்று பிரிட்டன் புறப்பட்டனர். இக்குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் தலைமையிலான இக்குழுவினர் தங்களது பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

