தூத்துக்குடி அய்யனடைப்பு செங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (50), கூலித் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால், ஆனந்த் தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள தங்கமணி என்பவருக்குச் சொந்தமான விறகுக் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் ஆனந்த் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், விறகுக் கட்டையால் ஆனந்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்த நபர்கள் யார்? எதற்காகக் கொலை செய்தனர்? மதுபோதையில் ஏற்பட்ட தகராறா அல்லது குடும்பப் பிரச்சினையா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தித் தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் கூலித் தொழிலாளி விறகுக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.