விமானத்தைக் கடத்த முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹமாமி கைது செய்யப்பட்டு, போலிஸில் அளித்துள்ள வாக்குமூலம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "விமானத்தைத் தரையில் மோதித் தகர்க்கத் திட்டமிட்டிருந்தேன், உயிரிழப்பு குறித்து எனக்கு பயமில்லை" என்று அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு: கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்தின் துணை பைலட் ஹமாம் அல்-ஹமாமி விமானத்தைக் கடத்த முயற்சி செய்தார்.

அப்போது, விமானத்தில் இருந்த இந்திய முதன்மை பைலட் ஸ்மித் மச்சார் தனது உயிரைப் பணயம் வைத்து, துணை பைலட்டின் கடத்தல் முயற்சியை வீரத்துடன் முறியடித்தார். அதனைத் தொடர்ந்து யு.ஏ.இ. போலிஸார் துணை பைலட் ஹமாம் அல்-ஹமாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள்: யு.ஏ.இ-இல் பிறந்த ஹமாம் அல்-ஹமாமி, ஓமன் குடியுரிமை பெற்றவர். தனது இளமைக் காலத்தைச் சிரியாவில் கழித்தபோது, அவருக்கு அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளின் சிந்தனைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

2024-ல் தீவிரவாத இணையதளங்களில் ஆர்வம் காட்டியதால் இவர் விமானியாகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2025 ஜூன் மாதத்தில் 'ராயல் ஏர் மொராக்கோ' நிறுவனத்திலும், கடந்த ஜனவரியில் 'பிளை துபாய்' நிறுவனத்திலும் பைலட்டாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

இவரது சமூக வலைதளப் பக்கங்களில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் மற்றும் தற்கொலை படைத் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சிரியாவில் வாழ்ந்த காலத்தில் தீவிரவாத அமைப்புகளுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து யு.ஏ.இ. போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்