கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளிம்புநிலை மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விரைவாகச் சென்றடைவதை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசு உறுதி செய்யும் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட காஞ்சாம்புரம் கைரலி திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை இ-பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை வழங்கிப் பேசினார்.
விழாவில் அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பேசியதாவது: "முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஆதிதிராவிட மற்றும் விளிம்புநிலை மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் 'அ' வருவாய் கிராமத்திற்குட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கோரி வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நில அளவைப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, தற்போது 84 பயனாளிகளுக்கு 0.67.20 ஹெக்டேர் பரப்பளவிலான ரூ.2.33 கோடி மதிப்பிலான நிலத்திற்கான இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வழி இ-பட்டா மூலம் பொதுமக்கள் தங்களது நில உரிமையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ள முடியும்."
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் சட்டமன்ற உறுப்பினரிடமும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் முதியோர் உதவித்தொகை, கடனுதவிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டி.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.வி.சாய் சரண் ரெட்டி, கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

