» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் : டிச.15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 25, நவம்பர் 2024 4:10:05 PM (IST)
சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மாவட்ட சமூகநல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) செயல்பட்டு வருகிறது. அதில் சுழற்சி முறையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் உள்ள உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒரு மூத்தஆலோசகர் (ஒருங்கிணைந்த சேவை மையம், தூத்துக்குடி - 1): சட்டம் / சமூகப்பணியில் முதுநிலைப் பட்டம் (MSW) / சமூகவியலில் முதுநிலை / உளவியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 வருட முன்அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் (Counselling) இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.22000/- ஆகும்.
ஐந்து வழக்குப் பணியாளர்கள் (ஒருங்கிணைந்த சேவை மையம், தூத்துக்குடி – 2, கோவில்பட்டி-3): சட்டம் / சமூகப்பணி / உளவியல் / சமூகவியலில் / சமூக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 வருட முன்அனுபவம் இருத்தல் வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.18000/- ஆகும்.
ஒரு பாதுகாவலர் (ஒருங்கிணைந்த சேவை மையம், தூத்துக்குடி - 1): அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் முன்அனுபவம் இருத்தல் வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.12000/-
இரண்டு பல்நோக்கு உதவியாளர்கள் (ஒருங்கிணைந்த சேவை மையம், தூத்துக்குடி – 1, கோவில்பட்டி-1): 10ம் வகுப்புத்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் மற்றும் அலுவலகப் பராமரிப்பு பணிகள் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.10000/- ஆகும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 15.12.2024 மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைக் பின்வரும் மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101, தொலைபேசிஎண்: 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.