» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
கரோனா தடுப்புப் பணிக்காக ரூ.40,000 ஊதியம்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு அழைப்பு
செவ்வாய் 11, மே 2021 5:10:26 PM (IST)
ரூ.40,000 ஊதியத்துடன் சென்னையில் கரோனா தடுப்புப் பணியை மேற்கொள்ள இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா 2-வது அலையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என அனைத்து அவசியத் தேவைகளும் பற்றாக்குறையாக இருந்து வருகிறது.
தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த முதுகலை நீட் தேர்வை மத்திய அரசு அண்மையில் ஒத்திவைத்தது. இந்நிலையில் ரூ.40,000 ஊதியத்துடன் சென்னையில் கரோனா தடுப்புப் பணியை மேற்கொள்ள இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில் தேர்வு செய்யப்படும் 300 பயிற்சி மருத்துவர்கள் 3 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும்.
இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானதுதான். எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. பணியில் சேர்வதற்கு முன், மாணவர்கள் சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
மின்னஞ்சல் மூலமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பயிற்சி மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவர். மின்னஞ்சல் மூலமாகப் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 13.05.2021 அன்று தொலைபேசி மூலம் தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 14.05.2021 முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்
* சுயவிவரம்
* இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ்
* 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
* கல்லூரி அடையாள அட்டை
ஆர்வமுள்ள இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மேற்குறிப்பிட்ட விவரங்களோடு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 13 மதியம் 2 மணி.