» சினிமா » செய்திகள்

அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்: மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்

வெள்ளி 24, மே 2024 5:18:32 PM (IST)


"கண்மணி அன்போடு காதலன்" பாடலுக்கு உரிய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தியதாக மஞ்ஞுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் சான் ஆண்டனி விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்.23 ஆம் தேதி திரையரங்களில் வெளியானது. பறவா பிலிம்ஸ் சார்பில் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் இப்படத்தை தயாரித்தனர். சௌபின் சாகிர், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம், உலகம் முழுவதும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தது. 

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளத்தை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. பிரேமம் பட வசூலை பின்னுக்குத்தள்ளி இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை இப்படம் படைத்தது. இப்படத்தில் கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. 

இப்பாடல் குணா படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பிரபலமான காதல் பாடல். அதனை மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதனிடையே, மஞ்ஞுமல் பாய்ஸ் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய இசையமைப்பில் உருவான பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு நோட்டீஸ் விடுத்துள்ளார். 

பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், தவறினால், பதிப்புரிமையை மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு உரிய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தியதாக மஞ்ஞுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் சான் ஆண்டனி விளக்கமளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory