» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக ரேபிட் செஸ் போட்டி: ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் கார்ல்சென் தகுதி நீக்கம்!

ஞாயிறு 29, டிசம்பர் 2024 9:20:32 AM (IST)



உலக டேபிட் செஸ் போட்டியில் ஜீன்ஸ் அணிந்து வந்ததால் கார்ல்சென் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஓபன் பிரிவில் அதிவேகமாக காய்களை நகர்த்த கூடிய ரேபிட் வடிவிலான போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் 5 சுற்று முடிவடைந்த நிலையில், 2-வது நாளான நேற்று முன்தினம் மேலும் 4 சுற்றுகள் நடந்தது. நடப்பு சாம்பியன் கார்ல்சென் போட்டிக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்தார். சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) விதிமுறையின்படி வீரர்கள் போட்டியின் போது ஜீன்ஸ் அணிய கூடாது. ஆனால் கார்ல்சென் ஆடை கட்டுப்பாடு விதிமுறையை மீறியதால் அவருக்கு ரூ.17 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் 8-வது சுற்று முடிந்தவுடன் உடையை மாற்றி கொண்டு போட்டியை தொடரலாம் என்று போட்டி நடுவர் அலெக்ஸ் ஹோலோவ்சாக், கார்ல்செனை கேட்டுக்கொண்டார். ஆனால் அதை ஏற்க கார்ல்சென் மறுத்தார். என்னால் உடனடியாக ஆடையை மாற்ற முடியாது. நாளை முதல் சரியான உடையில் வருவதாக கூறினார்.

இதை ஏற்காத நடுவர் அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதனால் கோபத்தோடு வெளியேறிய கார்ல்சென் இந்த போட்டியின் பிளிட்ஸ் பிரிவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார். கார்ல்சென் கூறுகையில், ‘பிடேவின் ஆடை கட்டுப்பாடு விதிமுறை என்னை சோர்வடையச் செய்துள்ளது. அவர்கள் என்னை சமாதானப்படுத்த விரும்பவில்லை. இது ஒரு முட்டாள்தனமான கொள்கை. மொத்தத்தில் ‘பிடே’வின் இந்த செயல் என்னை வருத்தமடையை செய்துள்ளது. அதனால் பிளிட்ஸ் போட்டியில் இருந்து விலகுகிறேன்’ என்றார்.

இதுகுறித்து சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘தொழில்முறை செஸ் வீரர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிமுறைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது அனைத்து வீரர்களுக்கும் நன்றாக தெரியும். ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் இது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இன்று கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து போட்டி விதிமுறையை மீறி இருக்கிறார். இந்த தொடரில் நீண்ட நாட்களாக இந்த விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கார்ல்செனை தகுதி நீக்கம் செய்தோம். இந்த முடிவு எந்தவித பாரபட்சமின்றி எடுக்கப்பட்டது. இது அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory