» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி கோலாகல நிறைவு:126 பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:32:30 PM (IST)



பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி ேநரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.

33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு முட்டி மோதினர்.

17 நாட்கள் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் ஸ்டேடியத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு ஆக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். இறுதியில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் நடக்க உள்ள அமெரிக்காவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக் சுவாரசியமான அம்சங்கள்

பதக்கப்பட்டியலில் வழக்கம் போல் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நீயா- நானா? போட்டி நிலவியது. முதல் ஒரு வாரம் பின்தங்கி இருந்த அமெரிக்கா அதன் பிறகு தடகளத்தில் பதக்கவேட்டையை தொடங்கியதும் மளமளவென ஏற்றம் கண்டு சீனாவை நெருங்கியது. நேற்று முன்தினம் சீனாவை விட ஒரு தங்கம் குறைவாக இருந்தது. நேற்றைய கடைசி நாளில் சீனா பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கத்தை தன்னகத்தை இணைத்தது.

அதே சமயம் அமெரிக்கா சைக்கிளிங் மற்றும் பெண்கள் கூடைப்பந்தில் தங்கப்பதக்கத்தை வேட்டையாடியது. இதனால் அமெரிக்கா, சீனாவின் தங்கப்பதக்கம் எண்ணிக்கை 40-ஆக சமநிலையை எட்டியது. இருப்பினும் அமெரிக்கா வெள்ளி, வெண்கலத்தை அதிகம் வென்று ஒட்டுமொத்த பதக்கம் குவிப்பதில் மூன்று இலக்கத்தை (126 பதக்கம்) கடந்திருந்ததால் அந்த நாடு அரியணையில் அமர்ந்தது. தடகளத்தில் 14 தங்கம் உள்பட 34 பதக்கமும், நீச்சலில் 28 பதக்கமும், ஜிம்னாஸ்டிக்சில் 9 பதக்கமும் அறுவடை செய்தது அமெரிக்கா முதலிடத்தை எட்டிப்பிடிக்க பக்கபலமாக இருந்தது. ஒலிம்பிக் தொடர் ஒன்றில் அமெரிக்கா ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருவது இது 19-வது முறையாகும்.

சீனா 40 பதக்கம் உள்பட 91 பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்தது. தண்ணீருக்குள் ‘டைவ்’ அடித்து திறமையை காட்டும் டைவிங்கில் 8 தங்கத்தையும், டேபிள் டென்னிசில் 5 தங்கத்தையும் வேறு எந்த நாட்டையும் தொட விடாமல் சீனா முழுமையாக கபளீகரம் செய்தது.

வில்வித்தையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் தென்கொரியா ஆண்கள், பெண்களில் தனிநபர், அணிகள் மற்றும் கலப்பு ஆகிய 5 பிரிவுகளிலும் தங்கத்தை சுருட்டியது. ஒலிம்பிக் வில்வித்தையில் 5 தங்கத்தையும் முழுமையாக வென்ற முதல் தேசம் தென்கொரியா தான். இதில் பெண்கள் அணி பந்தயம் அறிமுகம் ஆன 1988-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 10-வது முறையாக மகுடம் சூடியிருக்கிறது.

பதக்கப்பட்டியலில் மொத்தம் 91 நாடுகள் இடம் பிடித்தன. அல்பேனியா, கேப் வெர்டே, டொமினிகா, செயின்ட் லூசியா போன்ற நாடுகள் ஒலிம்பிக்கில் பதக்க கணக்கை தொடங்கின. போட்ஸ்வானா, கவுதமாலா ஆகிய நாடுகள் முதல்முறையாக தங்கத்தை ருசித்தன. ஈட்டி எறிதலில் அர்ஷத் நதீம் பெற்ற தங்கம் மூலம் பதக்கப்பட்டியலில் பாகிஸ்தான் 32 ஆண்டுக்கு பிறகு இணைந்தது. அகதிகள் அணியும் முதல்முறையாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை (குத்துச்சண்டையில் ஒரு வெண்கலம்) வென்றது.

இந்த ஒலிம்பிக்கில் தனிநபரில் அதிகபட்சமாக சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யூபெய் 6 பதக்கங்களை (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) அள்ளினார். பிரான்ஸ் நீச்சல் வீரர் லியோன் மார்சந்த் 4 தனிநபர் பிரிவுகளில் ஒலிம்பிக் சாதனையோடு தங்கத்தை முகர்ந்தது முத்தாய்ப்பாக அமைந்தது. இதே போல் அமெரிக்க நீச்சல் வீராங்கனை டோரி ஹஸ்கே 3 தங்கம், 2 வெள்ளி வென்று முத்திரை பதித்தார்.

இந்தியாவுக்கு ஏமாற்றம்


117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த தடவை 6 பதக்கத்துடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) திருப்தி அடைய வேண்டியதாயிற்று. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர், இதன் கலப்பு பிரிவில் மனு பாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி, துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் மூன்று நிலை பந்தயத்தில் ஸ்வப்னில் குசாலே, மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் மற்றும் ஆக்கி அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. நடப்பு சாம்பியன் கெத்துடன் நுழைந்த நீரஜ் சோப்ராவின் ஈட்டி இந்த முறை வெள்ளியையே குத்தியது. ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கத்தை சுவைத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்தது தனிச்சிறப்பாகும்.

நமது அணியில் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்ட 8 வீரர், வீராங்கனைகள் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை. ஒரு தங்கம் கூட கிடைக்காதது நிச்சயம் ஏமாற்றம் தான்.

சர்ச்சைகள்

* பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிப் 66 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். அவரிடம் குத்து வாங்கிய இத்தாலி வீராங்கனை ஏஞ்சலோ கரினி இப்படிப்பட்ட குத்துகளை இதற்கு முன் நான் வாங்கியதில்லை என்று கூறி பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். இதனால் இமானே கெலிப் ஆணா? பெண்ணா? என்ற சர்ச்சை ஏற்பட்டது. எதையும் கண்டு அசராத கெலிப் இறுதியில் சீன வீராங்கனை யாங் லியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். நான் பெண்ணாக பிறந்தேன், பெண்ணாக வாழ்கிறேன், பெண்ணாகவே இந்தபோட்டியில் களம் கண்டேன் என விமர்சனவாதிகளுக்கு பதிலடி கொடுத்தார்.

* டிரையத்லான் போட்டிக்காக சென் நதியில் நீந்திய நிறைய வீரர், வீராங்கனைகள் நீர் சுத்தமாக இல்லை என்று புகார் கூறினர். நீர் மாசுபாடு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் வீராங்கனை கிளாரி மிசெல் விலகியதால், அந்த அணியே டிரையத்லான் கலப்பு தொடர் ஓட்டத்தில் இருந்து பின்வாங்கியது. இதனால் சென் ஆற்று நீரின் தரம் குறித்து மீண்டும் சலசலப்பு உருவானது.

* தொடக்க ஆட்டத்துக்கு முன்பாக கனடா பெண்கள் கால்பந்து அணியினர் டிரோன் மூலம் நியூசிலாந்து அணியின் பயிற்சி நடவடிக்கைகளை உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்த மாதிரி தில்லுமுல்லு யுக்திக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம், கனடாவின் 3 பயிற்சியாளருக்கு ஓராண்டு தடை விதித்தும், அந்த அணிக்கு லீக் சுற்றில் பெறும் புள்ளிகளில் 6 புள்ளி தகுதி இழப்பு செய்தும் உத்தரவிட்டது.

* 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விவகாரமும் இந்த ஒலிம்பிக்கில் பெரும் விவாதத்திற்குள்ளான ஒரு விஷயமாகும். பதக்கம் கேட்டு வினேஷ் இப்போது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தை நாடியுள்ளார்.

ஒலிம்பிக் டென்னிசில் 2008-ம் ஆண்டு முதல் பங்கேற்று வரும் முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின் ஏக்கம் ஒரு வழியாக தணிந்தது. இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் அல்காரசை நேர் செட்டில் சாய்த்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்ட 37 வயதான ஜோகோவிச், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் முதல்முறையாக ஒலிம்பிக்கிலும் மகுடம் சூடியதால், ‘கோல்டன் ஸ்லாம்’ என்ற அரிய அந்தஸ்தை எட்டிப்பிடித்தார்.

சீனாவின் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் 35 வயதான மா லாங், அணிகள் பிரிவில் தங்கமகனாக ஜொலித்தார். தனது கடைசி ஒலிம்பிக்கில் அடியெடுத்து வைத்த அவருக்கு இது ஒலிம்பிக்கில் 6-வது தங்கமாகும். ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் வேறு யாரும் 4 தங்கத்துக்கு மேல் வென்றதில்லை. இதே போல் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான கென்யா வீராங்கனை பெய்த் கிப்யேகான் தொடர்ந்து 3-வது முறையாக தங்கத்தை தட்டித்தூக்கினார். 1,500 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 தங்கம் வென்ற முதல் வீராங்கனை இவர் தான்.

உலகின் அதிவேக வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தில் இப்படியொரு திரில்லிங்கான முடிவை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அமெரிக்காவின் நோவா லைல்சும், ஜமைக்காவின் கிஷானே தாம்சனும் சொல்லி வைத்தார் போல் ஒரே நேரத்தில் (9.79 வினாடி) கடந்ததால் வெற்றியாளரை அடையாளம் காண்பதில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு ‘போட்டோ பினிஷ்’ தொழில் நுட்பம் வாயிலாக ஆராய்ந்ததில் லைல்ஸ் நூலிழை வித்தியாசத்தில் முந்தியிருப்பது தெரிய வந்தது. அதாவது ஒரு வினாடியை ஆயிரமாக பங்கிட்டால் அதில் 5 பங்கு லைல்ஸ் முன்னிலை (0.005 வினாடி) பெற்றிருந்தன் மூலம் உலகின் அதிவேக மனிதராக உருவெடுத்தார்.

நீச்சலில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஆடம் பியட்டி, அமெரிக்க வீரர் நிகோலஸ் பிங் இருவரும் ஒரே நேரத்தில் (59.05 வினாடி) 2-வது இடத்தை பிடித்ததால் இருவருக்கும் கூட்டாக வெள்ளிப்பதக்கம் அளிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory