» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

திலக் வர்மா அசத்தல் சதம்: 3வது டி-20யில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

வியாழன் 14, நவம்பர் 2024 12:18:26 PM (IST)



தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 3ஆவது 'டி-20' போட்டியில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று, மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் (0) மீண்டும் ஏமாற்றினார். பின் இணைந்த அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஜோடி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை பதம்பார்த்தது. கேஷவ் மஹாராஜ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அபிஷேக், 24 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது மஹாராஜ் 'சுழலில்' அபிஷேக் (50 ரன், 5 சிக்சர், 3 பவுண்டரி) சிக்கினார். 

கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1), ஹர்திக் பாண்ட்யா (18) நிலைக்கவில்லை. சிபம்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திலக், சர்வதேச 'டி-20' அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ரமன்தீப் சிங் (15) 'ரன்-அவுட்' ஆனார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்தது. திலக் (107 ரன், 56 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி), அக்சர் படேல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் (20), ஹென்ரிக்ஸ் (21) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கேப்டன் மார்க்ரம் (29) ஆறுதல் தந்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (12) ஏமாற்றினார். பின் இணைந்த கிளாசன், டேவிட் மில்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. வருண் சக்கரவர்த்தி வீசிய 14வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்டார் கிளாசன். ஐந்தாவது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது மில்லர் (18) அவுட்டானார். கிளாசன் (41) ஓரளவு கைகொடுத்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் சிங் பந்து வீசினார். இரண்டாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய யான்சென், 16 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 54 ரன்னில் (5 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன் மட்டும் கிடைத்தன. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 208 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் சாய்த்தார்.

தென் ஆப்ரிக்க அணி ஒரு ஓவரில் 7/0 ரன் எடுத்திருந்த போது ஆடுகளத்திற்குள் ஈசல் கூட்டமாக படையெடுத்தன. இது, வீரர்களுக்கு தொல்லையாக இருந்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மைதான ஊழியர்கள் ஆடுகளத்திற்குள் விழுந்த ஈசலை அகற்றிய பின், மீண்டும் போட்டி தொடர்ந்தது.

தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த 'டி-20' போட்டியில் இந்திய அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை (219) பதிவு செய்தது. இதற்கு முன், 2018ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 203/5 ரன் எடுத்திருந்தது. தவிர இது, சர்வதேச 'டி-20' அரங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் 2வது அதிகபட்ச ஸ்கோர். ஏற்கனவே 2022ல் கவுகாத்தியில் நடந்த போட்டியில் இந்திய அணி 237/3 ரன் குவித்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory