» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் நிறைவு விழா: மனு பாக்கருடன் ஸ்ரீஜேசும் தேசிய கொடியேந்துகிறார்!

சனி 10, ஆகஸ்ட் 2024 11:57:25 AM (IST)



ஒலிம்பிக் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருடன் இணைந்து இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடக்க விழா அணிவகுப்பு வித்தியாசமான முறையில் அரங்கேறியது. சென் நதியில் படகுகள் மூலம் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்தனர். மழைக்கு மத்தியில் தொடக்க விழா கொண்டாட்டம் 4 மணி நேரம் நடந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த 17 நாள் விளையாட்டு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு நிறைவு விழா தொடங்குகிறது. இதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், இசையுடன் கூடிய நடனம் மற்றும் பார்வையாளர்களை வியக்க வைக்கும் கலைஞர்களின் சாகசங்கள் இடம் பெறுகிறது.

அத்துடன் தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவிலும் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு கவனத்தை ஈர்க்கும்.. போட்டியில் பங்கேற்றுள்ள நாட்டு வீரர்-வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடியுடன் உற்சாகமாக வலம் வருவார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் நட்சத்திர வீரர்களுக்கு கொடியேந்தி செல்லும் கவுரவம் வழங்கப்படும்.

தொடக்க விழாவில் இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், மனு பாக்கருடன் இணைந்து தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

4-வது முறையாக ஒலிம்பிக்கில் களம் கண்ட 36 வயதான ஸ்ரீஜேஷ் இந்திய அணிக்காக 336 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்திய ஆக்கி அணியின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ஸ்ரீஜேஷ், எதிரணியின் பல ஷாட்டுகளை தடுத்து அணியின் வெற்றிக்கு தூணாக திகழ்ந்தார். அவரது மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கொடியேந்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கூறுகையில், ‘தேசிய கொடியை ஏந்த இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணியின் உணர்வுபூர்வமான மற்றும் பிரபலமான தேர்வாக ஸ்ரீஜேஷ் இருந்தார். அவர் இந்திய ஆக்கிக்கும் பொதுவாக இந்திய விளையாட்டுக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக போற்றத்தக்க வகையில் பணியாற்றி இருக்கிறார். 

ஸ்ரீஜேசுக்கு கொடியேந்த வாய்ப்பு அளிப்பது குறித்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் பேசிய போது அவர் அதனை மனதார வரவேற்றார். அத்துடன் மேடம், நீங்கள் என்னிடம் கேட்காவிட்டாலும் ஸ்ரீஜேஷ் பெயரை பரிந்துரைத்து இருப்பேன் என்று பெருந்தன்மையுடன் கூறினார். இது ஸ்ரீஜேஷ் மீது நீரஜ் வைத்து இருக்கும் மரியாதை மற்றும் அவர் இந்திய விளையாட்டுக்கு அளித்த பங்களிப்பை பிரதிபலிப்பதாக இருந்தது’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory