» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை முதல்முறையாக ‘சாம்பியன்
திங்கள் 29, ஜூலை 2024 10:28:11 AM (IST)
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதல்முறையாக ‘சாம்பியன் பட்டம் வென்றது.
8 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வந்தது. இதில் நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், இலங்கையும் மோதின. ‘டாஸ்’ வென்ற முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மா (16 ரன்), உமா சேத்ரி (9 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11 ரன்) ஏமாற்றினாலும் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (60 ரன், 47 பந்து, 10 பவுண்டரி), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (29 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (30 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. 20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டிப்பிடித்த (ேசசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு 61 ரன்களும் (43 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்ஷிதா சமரவிக்ரமா 69 ரன்களும் (51 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டனர். சமரவிக்ரமா ஆட்டநாயகி விருதையும், கேப்டன் சமாரி அட்டப்பட்டு (5 ஆட்டத்தில் 304 ரன்னுடன் 3 விக்கெட்) தொடர் நாயகி விருதையும் பெற்றனர்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 5 முறை இந்தியாவிடம் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த இலங்கை அதற்கு பழிதீர்த்துக் கொண்டது. சரித்திரம் படைத்த அந்த அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.83 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுவரை நடந்துள்ள அனைத்து ஆசிய கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.