» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி: போபால் அணி சாம்பியன்
திங்கள் 3, ஜூன் 2024 10:19:05 AM (IST)
கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்திய இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்மூன்றாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெற்றது.
கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை முன்னாள் அமைச்சர்,கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு மற்றும் கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி.சங்கரநாராயணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இறுதி ஆட்டத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதினவிறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2வது இடத்தை புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி பெற்றது.
முன்னதாக 3,4 இடங்களுக்கு நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், பெங்களூர் கனரா வங்கி அணியும் மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது.
முதலிடம் பெற்ற போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணிக்கு இலட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி கோப்பை மற்றும் ரூபாய் 1,00,000-க்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணிக்கு ரூபாய் 75,000- ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணிக்கு ரூபாய் 50,000-க்கான ரொக்கப் பரிசு, நான்காமிடம் பெற்ற பெங்களூரு, கனரா பேங்க் அணிக்கு ரூபாய் 30,000-க்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கபட்டது.
மேலும் காலுறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை-அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப், சென்னை-இந்தியன் பேங்க், கோவில்பட்டி-எஸ்டிஏடி எக்ஸலன்ஸ், சென்னை-இன்கம் டேக்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.
மேலும், போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர்கள் ஹெச்.எஸ்.மோஹித்-க்கு சிறந்த கோல் கீப்பர்க்கான விருதும், விஸ்வாசுக்கு சிறந்த முன்கள ஆட்டக்காரருக்கான விருதும், அமந்தீப் லக்ராவுக்கு தொடர் நாயகன் விருதும், பெங்களூரு-கனரா பேங்க் அணி வீரர் பரத் மஹாலிங்கப்பா-வுக்கு சிறந்த தடுப்பாளர் விருதும், புபனேஸ்வர்-நிஸ்வாஸ் அணி வீரர் சுமித் ஹின்டோ-வுக்கு சிறந்த நடுகள ஆட்டக்காரருக்கான விருதும், கோவில்பட்டி-எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் எம்.ஆனந்தராஜுக்கு சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தாசில்தார் சரவண பெருமாள், அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் சி.ராமசாமி, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.மதிவண்ணன், வழக்கறிஞர் சம்பத்குமார், ஹாக்கி வீரர்கள், ஹாக்கி ரசிகர்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் நிறைவு விழாவில் நன்றி கூறினார்
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர், தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் கே.ரகு, முனைவர் ஆர்.ராம்குமார், முனைவர் ஆர்.சிவராஜ், எஸ்.கீதா, மற்றும் ஹாக்கி பயிற்சியாளர் சிவநேச செல்வராஜ் பாண்டியன், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.