» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு

வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)



தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து விலகித் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த 4 பேருக்குச் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல், தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதில் மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் (தனி) சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தனர்.

இதன் காரணமாகத் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. விதிமுறைப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் நோட்டீஸ்

இந்தச் சூழலில், ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்தும், அவர்கள் 4 பேர் மீதும் ஏன் தகுதி நீக்கம் உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் நேரில் அல்லது எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Yoseph EJun 12, 2026 - 08:02:58 PM | Posted IP 104.2*****

மேலும் தொடரும் செய்திகள் linkகுகளில் மேலே உள்ள செய்தி தொடர்பான செய்தி linkகுகள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory