» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் போலீஸ் உடையில் வலம் வந்த போலி சிபிஐ அதிகாரியைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்புகளின் பெயரிலான 10-க்கும் மேற்பட்ட போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று சுகாதார ஆய்வாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார். அவர் காவல் துறையினர் பயன்படுத்தும் வகையிலான கால்சட்டை (பேண்ட்), பெல்ட் மற்றும் காலணிகளை (ஷூ) அணிந்து மிடுக்கான தோற்றத்தில் காணப்பட்டார். மேலும், அவர் வந்த இருசக்கர வாகனத்தில் ‘மத்திய அரசு போலீஸ்’ மற்றும் ‘இன்சூரன்ஸ்’ என்றும் எழுதப்பட்டிருந்தது.
அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்கள் டேனியல் கிருபாகரன், மணி ஆகியோருக்கு அந்த நபரின் தோற்றம் மற்றும் வாகன எழுத்துக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் கூந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (45) என்பது தெரியவந்தது. முதலில் தன்னைச் சிபிஐ அதிகாரி என்று கூறிய அவர், பின்னர் முன்னுக்குப் பின் முரணாகப் பல்வேறு பதவிகளில் இருப்பதாக மாறி மாறிப் பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது பையைச் சோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. வேல்முருகன் எந்தவொரு வேலையும் செய்யாமல், தன்னை ஒரு பெரிய அதிகாரி போலக் காட்டிக்கொண்டு பல இடங்களில் சுற்றித் திரிந்தது அம்பலமானது. 'சிபிஐ ஸ்பெஷல் ஆபீசர்' (CBI Special Officer) மற்றும் மத்திய விபச்சாரத் தடுப்புப் பிரிவு (Vigilance) போன்ற 10-க்கும் மேற்பட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் போலி அடையாள அட்டைகள்,
அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) ஆகியவற்றின் உறுப்பினர் அட்டைகள் குவிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், வேல்முருகனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
இவ்வளவு போலி அடையாள அட்டைகளை எதற்காகத் தயாரித்தார், இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய பண மோசடித் திட்டங்கள் அல்லது ஆள்மாறாட்டக் குற்றங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பின்னர், அரசு ஊழியர் எனச் சொல்லி ஏமாற்றிய குற்றத்திற்காகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் கைதான வேல்முருகனைப் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அங்கு நின்ற போலீஸ் வேனில் போலீசார் ஏற்றினர். ஆனால், சுமார் 15 நிமிடங்கள் முயன்றும் அந்த வேன் என்ஜின் கோளாறு காரணமாகத் துவங்கவில்லை. வாகனம் திடீரெனப் பழுதானதால், உடனடியாக வேல்முருகனை ஆய்வாளரின் ஜீப்பில் ஏற்றிப் போலீசார் அழைத்துச் சென்றனர். இச்சம்பவங்களால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகையிலைக்கு நாடு முழுவதும் முழுமையான தடை : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 13, ஜூன் 2026 10:32:37 AM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)









