» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்: தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!

சனி 9, மே 2026 11:22:07 AM (IST)

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில், தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

இந்தச் சூழலில் தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் டிடிவி தினகரன்., தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ள தங்கள் கட்சியின் எம்எல்ஏவான காமராஜ், அதிமுகவை ஆதரிப்பதாக ஆளுநர் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.பின்னர், தங்கள் கட்சியின் எம்எல்ஏ-வை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரைக் காணவில்லை என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்தார் அமமுக எம்எல்ஏ காமராஜ். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார்.அப்போது பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், "நான் புதுச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத போன். அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார்” என்று தெரிவித்தார். இதனையடுத்து காமராஜ் தனது கைப்பட கடிதம் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory