» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக மக்களுக்கு இபிஎஸ் துரோகம் செய்துள்ளார்: கனிமொழி தாக்கு

சனி 12, ஏப்ரல் 2025 4:53:33 PM (IST)

அ.தி.மு.க.,வுக்கும், தமிழக மக்களுக்கும், எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என, தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: இனி ஒரு போதும், பா.ஜ., வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என, தெரிவித்த பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை அறிவித்துள்ளார். பா.ஜ.,வின் பல்வேறு மசோதாக்களை, திட்டங்களை எதிர்த்து கொண்டிருப்பதாக, சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில் மவுனமாக அமர்ந்து, பா.ஜ.,வுடன் கூட்டணியை ஏற்றுக் கொண்டார்.

அ.தி.மு.க., - பா.ஜ.வினர் பிரிந்து விட்டாலும், தொடர்பில் தான் இருக்கின்றனர். மீண்டும் அவர்களின் கூட்டணி உருவாகும் என, முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியது உண்மை என்பது நிருபணமாகி உள்ளது. காசி தமிழ் சங்கம் நடத்தியது மிகப் பெரிய தொண்டு என, பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.

தமிழ் காசிக்கு செய்யக் கூடிய நன்மையாக, நாம் எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதனால் தமிழ் எப்படி வளர்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. சமஸ்கிருதம் மொழிக்கு 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால், தமிழை வளர்க்கிறோம் என, சொல்கிற பா.ஜ.,வினர், தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட செலவு செய்யவில்லை. இப்படி பாரபட்சமாக மத்திய அரசின் ஆட்சி நடக்கிறது.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில், தமிழ் சொல்லிக் கொடுக்க, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை. இப்படி ஒரு ஆட்சியில், தமிழ் வளர்ச்சிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும். பிரதமர் எங்கேயாவது செல்லும்போது, திருக்குறளை சொல்வதும், மத்திய நிதி அமைச்சர், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதையும், தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஹிந்தியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாரே தவிர, தமிழுக்காக எதுவும் அவர் செய்யவில்லை. சமீபத்தில் சிறுபான்மை மக்களுடன் நிற்போம் என, ஆணித்தரமாக பழனிசாமி பேசினார். ஆனால், யார் அந்த மசோதாவை நிறைவேற்றினரோ, அவர்களின் மேடையில் ஏன் அமர்ந்தார். தன் கட்சித் தலைவர்களான, அண்ணாதுரை, ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்த, ஒரு தலைவருடன் மேடையில் ஏன் பழனிசாமி அமர்ந்தார்.

யாரோ ஒருவர் கூட்டணி அறிவிக்க, பழனிசாமி கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ, அவர்கள் தான் கூட்டணியை அறிவிக்க வேண்டும். ஆனால், அந்த மேடையில் பேசுவதற்கு கூட, பழனிசாமிக்கு உரிமை இல்லாத நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்படுகிறது.

அ.தி.மு.க., தலைவர்களை எல்லாம் இழிவாக பேசக்கூடிய, பா.ஜ., தலைவர்களை, தன் வீட்டிற்கு அழைத்து, விருந்து அளிக்க வேண்டிய நிலைக்கு பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். இது கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் செய்துள்ள மிகப்பெரிய துரோகம். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory