» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. 

நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே இடப்பிரச்சினை நிலவி வந்தது. கடந்த 18-ந்தேதி காலை பள்ளிவாசல் தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், முகமது தவுபிக் மனைவி நூர் நிஷா மற்றும் நூர்நிஷா சகோதரர் அக்பர்ஷா உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

இதில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவரும் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். முகமது தவுபிக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக பிளஸ்-1 மாணவன் மற்றும் நூர் நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகமது ஆகியோரையும் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் முகமது தவுபிக் மனைவி நூர்நிஷா, போலீசார் தன்னை தேடுவதை அறிந்து, வெளியூருக்கு தப்பிச் சென்று விட்டார். அவர் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே கொலையாளிகளை பிடிக்க நியமிக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் நேற்று கேரளாவுக்கு சென்று முகாமிட்டுள்ளனர். நூர் நிஷா பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜாகீர் உசேன் வீட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியானதால், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலையில் இன்னும் பலர் மீது சந்தேகம் இருக்கிறது. போலீசார் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என ஜாகீர் உசேன் மகள் மோசீனா திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதன்படி அடுத்த 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education


New Shape Tailors





Thoothukudi Business Directory