» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரை விடுவித்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி தலைமையில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001- ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலத்தில் வேளாண் துறை அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகம் பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 606 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா, மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோர் பெயரும் சேர்க்கப்பட்டது.இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் சிறப்பு கோர்ட்டு, அனைவரையும் விடுவித்து 2006-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார்.
இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுவித்தது சரி எனக் கூறி, அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டாலும், மற்றவர்கள் மீதான வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறி, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டு விசாரணைக்கு மாற்றி, 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதற்கிடையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்து விட்டார். அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை . சொத்து, நிதி பரிவர்த்தனைகள் குறித்த ஆவண ஆதாரங்களுடன் தான் வழக்கு பதிவு செய்துள்ளது.
சொத்துக்கள் தங்கள் சொந்த சம்பாத்தியம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களை ஏற்க முடியாது. இந்த சொத்துக்கள் சொந்தமாக சம்பாதித்தவையா இல்லையா என்பதை முழுமையான சாட்சி விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு. அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்த சேலம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையை சேலம் நீதிமன்றம் தொடங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










