» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4,500 லஞ்சம் : கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது!
புதன் 22, ஜனவரி 2025 9:05:53 AM (IST)
சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு விவசாயியிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரவேல் (52), விவசாயி. இவர் ராஜகோபாலபேரி கிராமத்தில் தனது தந்தையின் பெயரில் உள்ள பூர்வீக வீட்டுக்கு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கடந்த 6-ந் தேதி ராஜகோபாலப்பேரி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி (42) என்பவரை அணுகினார்.
பத்மாவதி, குமாரவேலை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துவிட்டு தன்னை சந்திக்குமாறு கூறினார். 2 நாட்கள் கழித்து குமாரவேல், பத்மாவதியை மீண்டும் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி கூறினார்.
அதற்கு குமாரவேல், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். அப்படியானால் 5 ஆயிரம் ரூபாய் இல்லாமல் பட்டா மாற்ற முடியாது என்று பத்மாவதி கூறினார். கடைசியில் 4 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்ற முடியும் என பத்மாவதி தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க விருப்பமில்லாத குமாரவேல், இதுபற்றி தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பால்சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் ஆகியோர் குமாரவேலிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட 4 ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்து நேற்று காலை அனுப்பினர். போலீசார் கூறியபடி குமாரவேல், அந்த ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியிடம் கொடுத்தார்.
அப்போது வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக உள்ளே வந்து கையும் களவுமாக பிடித்து பத்மாவதியை கைது செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதான விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.