» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலகத் தமிழர்கள் திருநெல்வேலி வருகை!

வியாழன் 2, ஜனவரி 2025 4:40:31 PM (IST)



"வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த அயலகத் தமிழர்களுடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்துரையாடினார்.

திருநெல்வேலி மாவட்டம், டவுண் அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தினை இன்று (02.01.2025) உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் பார்வையிட்ட அயலகத்தில் வாழும் தமிழர்களுடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் கலந்துரையாடினார்கள்.

அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை' செயல்பட்டு வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாகவும், பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்த்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை பார்வையிட்டு, தெரிந்து கொள்வதற்காக வேர்களைத்தேடி என்ற பண்பாட்டுப்பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நமது கலாச்சாரங்கள், அடையாளங்கள், நமது பாராம்பரியம், முன்னோர்களின் வீர, தீர செயல்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கு 200 அயலகத்தமிழ் மாணவ, மாணவியர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு, பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, திருநேல்வேலி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக 157 மாணவ, மாணவியர்கள் வருகை தந்து, பார்வையிட்டு சென்றனர். மூன்றாம் கட்டமாக வருகை தந்த மாணவர்கள் டவுண் அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தினை பார்வையிட்டனர். அவர்களுடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்துரையாடினார்கள்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது: "வேர்களைத் தேடி” என்ற பெயரில் பண்பாட்டு பயணம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் சுற்றுலாத்துறை, பண்பாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில், ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 157 அயலகத்தமிழ் மாணவ, மாணவியர்களை அழைத்துவரப்பட்டு, பார்வையிட்டு திரும்பி சென்றுள்ளனர். தற்போது மூன்றாம் கட்ட பயணமாக 38 அயலகத் தமிழர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மொரிசியஸ், நார்வே, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீ இலங்கா, மலேசியா, உகான்டா, மியான்மர் 10 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வருகை தந்து டவுணில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலுள்ள சிற்பங்கள், இசைத் தூண்கள், சிலைகள் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்து, இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள், தாமிரசபை ஆகியவற்றையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்திலுள்ள நூல்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்து அமைக்கப்பட்டுள்ள ஒலி, ஒளி காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிட்டதையும், மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை தெரிவிக்கும் போது வேர்களைத் தேடி திட்டம் எவ்வாறு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவருகிறது.

இந்தியாவிலேயே 28-க்கும் மேற்பட்ட சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள் தமிழர்கள் அவர்களில் 20 விருதாளர்கள் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவ்வாறு, செம்மொழியான நமது தமிழ் மொழி சிங்கப்பூர், இலங்கை, கனடா, மொரிசியஸ் போன்ற பிற நாடுகளில் ஆட்சிமொழியாகவும், மலேசியாவில் போன்ற பிற நாடுகளில் இரண்டாவது மொழியாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு தொன்மையான தமிழ் மொழியினை நம் அனைவரும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே அயலக தமிழர்கள் அனைவரும் தங்களின் இல்லங்களில் தமிழ்மொழியில் பேச வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், இதற்கென தமிழ்நாடு அரசின் சார்பில் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அயலகத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்றவுடன் தமிழ்மொழி கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்து பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்கள்.

தொடர்ந்து, இக்குழுவினர் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், பாண்டிச்சேரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு பயணித்து, தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, திருநெல்வேலி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், எழுத்தாளர் நாறும்பூநாதன், அயலக தமிழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory