» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென் மாவட்டங்களில் கனமழை:எதையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

சனி 14, டிசம்பர் 2024 12:41:35 PM (IST)



தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி, அங்கு அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ‘எதையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை வரை கொட்டியது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேற்று நேரில் சென்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் மழை நிவாரண பணிகளை காணொலி காட்சி வாயிலாக, ஆய்வு மேற்கொண்டார்.

கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டதோடு, கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தினார்.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி, நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் முதல்-அமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆய்வின்போது வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் வி.மோகனசந்திரம், கூடுதல் ஆணையர் (வருவாய் நிர்வாகம்) எஸ்.நடராஜன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

பதில்:- தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கடந்த 2 நாட்களாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தி அதை மேற்பார்வையிடுவதற்காக இங்கிருந்து மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டு, நிவாரணப்பணிகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக ஏதும் செய்தி கிடையாது. எதுவந்தாலும் அதை சமாளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது.

கேள்வி:- அமைச்சர்கள் கண்காணிப்பு பணிகளில் இருக்கிறார்களா?

பதில்:- தென்காசி பகுதிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும், திருநெல்வேலிக்கு அமைச்சர் நேருவையும் அனுப்பி வைத்திருக்கிறோம்.

கேள்வி:- பேரிடர் நிதியை மத்திய அரசிடம் இருந்து தொடர்ந்து நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நேற்றுகூட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள். குறைவாகவே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தருகிறார்கள். அது பற்றி…

பதில்:- ஊடகத்தில் இருக்கக்கூடியவர்கள் நீங்கள் எல்லாம் அதனை தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும்.

கேள்வி:- ஏற்கனவே வழங்கிய நிதி போதுமானதாக இருக்கிறதா?

பதில்:- அது எப்படி போதும். போதுமானதாக இல்லை.

கேள்வி:- நீர்த்தேக்கம், ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறதே வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து...

பதில்:- திறந்து விடப்படுவதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

கேள்வி:- நிவாரண உதவிகள் வழங்கும் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதா...

பதில்:- நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறதே. கிட்டத்தட்ட வழங்கி முடிந்துவிட்டது.

கேள்வி:- ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- நேற்றே (நேற்று முன்தினம்) தெளிவாக அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. எங்களால் முடிந்தவரைக்கும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்.

கேள்வி:- கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

பதில்:- பார்ப்போம், யோசனை செய்வோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory