» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 25, டிசம்பர் 2024 5:48:18 PM (IST)
தமிழகத்தில் அடுத்த7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக இன்று (25.12.2024) வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (26.12.2024) மற்றும் நாளை மறுநாள் (27.12.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(28.12.2024 முதல் 31.12.2024 வரை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.