» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது!
வியாழன் 26, டிசம்பர் 2024 11:31:09 AM (IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி கடை நடத்தும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த வீடியோவை காண்பித்து, சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரை தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியுள்ளார்.
இதுதொடர்பாக விடுதி அறையில் உள்ள தோழிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். வெளியூரில் இருந்த பெற்றோர் உடனடியாக சென்னைக்கு விரைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜாவிடம் 24-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருணுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் துப்புதுலக்கினர். விடுதி மாணவர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர், கோட்டூர் பகுதி நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்துள்ளார். மாணவ, மாணவிகளை மிரட்டி இதுபோல பலமுறை தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்திலும் ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு, 2014-ல் வெளியே வந்துள்ளார். இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.