» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி: முதல்கட்டமாக ரூ.945 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!

சனி 7, டிசம்பர் 2024 10:56:32 AM (IST)



ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகம் வந்த மத்திய குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ் சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வீடுகள், விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.

‘பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2,475 கோடி தேவை. இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். சேதம் குறித்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு முதல்வர் கடந்த 2-ம் தேதி கடிதம் எழுதினார்.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புயல் பாதிப்புகளை கேட்டறிந்ததுடன் தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இந்நிலையில், புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.944.80 கோடி வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.944.80 கோடி விடுவிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி வழங்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை 28 மாநிலங்களுக்கு ரூ.21,718 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய குழு தமிழகம் வருகை: இந்நிலையில், தமிழகத்தில் புயல். வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக. மத்திய குழுவினர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தனர். மத்திய உள்துறை இணை இயக்குநர் ராஜேஷ் குப்தா தலைமையிலான இக்குழுவில், ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் துறையின் எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சி பிரிவு இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய நிதித் துறை செலவின பிரிவு இயக்குநர் சோனாமணிஹோபம், சென்னையில் உள்ள மத்திய நீர்வளத் துறை இயக்குநர் சரவணன், சென்னையில் உள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தி துறை உதவி இயக்குநர் ராகுல் பச்சேத்தி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே.எம்.பாலாஜி ஆகியோர் உள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் நேற்று இரவு 7 மணிக்கு ஆலோசனை நடத்தினர். பாதிப்புகள் குறித்து விளக்கப் படங்களுடன் தலைமைச் செயலர் முருகானந்தம் எடுத்துரைத்தார். மத்திய குழுவினர் இன்று 3 குழுக்களாக பிரிந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை யில் பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, புதுச்சேரி செல்கின்றனர்.

ரூ.6,675 கோடி வழங்க மத்திய குழுவிடம் முதல்வர் கோரிக்கை: மத்திய குழுவினர் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு, வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பல லட்சம் ஏக்கரில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு நீங்கள் விரைவாக அறிக்கை அளித்து உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றார். தற்காலிக, நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்குமாறு மத்திய குழு தலைவர் ராஜேஷ் குப்தாவிடம் முதல்வர் கோரிக்கை மனுவையும் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory