» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் : விஜய்க்கு சீமான் பாராட்டு!
புதன் 4, டிசம்பர் 2024 5:57:19 PM (IST)
புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களை நேரில் வரவழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கிய த.வெ.க. தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெஞ்சல் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களை தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில், விஜய் பனையூரில் நிவாரணம் வழங்கியது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, விஜய்யால் களத்தில் நிற்க முடியாது. பிரச்சினை இருக்கிறது. அவர் களத்திற்கு போனால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்துவிடும். அந்த பிரச்சினையை வேறு சமாளிக்க வேண்டும். விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே. அதை பாராட்ட வேண்டும் என தெரிவித்தார்.