» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இறைச்சிக் கூடங்களில் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்!
புதன் 4, டிசம்பர் 2024 5:24:37 PM (IST)
கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும்போதும் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ரிச்சர்டு ராஜ் வெளியிட்ட அறிவிப்பு : திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை வளர்பவர்கள், கால்நடை வணிக தொழில் நிறுவனங்களில் ஈடுபடுபவர்கள், கால்நடைகளை சந்தைகளில் விற்கப்படும் போதும், வாங்கப்படும் போதும் மற்றும் கால்நடைகளை அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து லாரிகள், மினிவேன்கள், அல்லது லோடு ஆட்டோகளில் கொண்டு செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும், கால்நடைகளை கொண்டு செல்லும் வாகனங்களில் கால்நடைகளுக்கு எவ்வித நெரிசலும் இன்றி தேவையான இடவசதி, தீவனம் மற்றும் தண்ணீர் ஆகிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அரசின் விழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி கால்நடைகளை ஏற்றி செல்லவதை காவல்துறை, வருவாய்துறை, போக்குவரத்துதுறை. உள்ளாட்சிதுறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் பிற நகரப்பகுதிகளில் செயல்பட்டுவரும் இறைச்சி அறுவைக் கூடங்களில் கால்நடை மருத்துவ சான்று பெற்ற கால்நடைகளை மட்டுமே வதை செய்ய வேண்டும். உணவுக்காக கால்நடைகள் வெட்டப்படும்போது முறையான சட்டவிதிகள் மற்றும் அறிவியல் பூர்வமான நடைமுறைகள் போன்ற தமிழ்நாடு அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கால்நடை வளர்ப்போர்கள் மற்றும் கால்நடை வணிக தொழிலில் ஈடுபடுபவர்கள் பின்பற்ற வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ரிச்சர்டு ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.