» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிண்டி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
வியாழன் 14, நவம்பர் 2024 9:57:53 AM (IST)
கிண்டி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை , கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பரிசோதனைக்கு பிறகே மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுசிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு மட்டுமே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து, அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்கங்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.