» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுரை!

சனி 19, அக்டோபர் 2024 3:30:45 PM (IST)



"சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டாம்" என்று விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார். 

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாணவர்களிடையே பேசுகையில் "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருளற்ற சமுதாயம் அமைந்திடவும், சமூகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான கல்வியையும், விழிப்புணர்வையும் வழங்கி போதைப்பொருள் பழக்கத்திற்கு யாரும் அடிமையாகாமல் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியதன் அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போதைப்பொருட்களின் தன்மைகள், அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இக்குறும்படத்தை பற்றிய கருத்துக்கள் மாணவர்களிடையே கேட்டறியப்பட்டது.

பள்ளி மாணவர்களாகிய நீங்கள் பான்மசாலா, குட்கா, Cool Lip மற்றும் மெல்லும் வாய் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை உட்கொள்ளும் போது உடலியல் ரீதியான மாற்றங்கள், உளவியல் மாற்றங்கள் உடல்நிலையில் ஏற்படும். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் போதைப்பொருள்கள் உபயோகிப்பதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். 

நம்முடைய குறைந்தபட்சம் ஆயுட்காலம் 70 -75 ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 35 வயதுக்குள் இறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களின் குடும்பம் மிகப்பெரிய பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே மாணவராகிய நீங்கள் தெரிந்து போதைப்பழக்கத்திற்கு ஆளாகமாட்டீர்கள். ஒவ்வொருவரும் முதலில் உறவினர்களோடு, நண்பர்களோடு பொழுதுபோக்காகவும், விளையாட்டுத்தனமாகவும் போதைப்பொருட்களை உட்கொள்ள தொடங்கி தொடர்ந்து அப்போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்றார்கள். 

மாணவர்களாகிய உங்களிடம் யாரேனும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒருமுறை உபயோகித்து பார்க்க சொல்லித்தந்தாலும், உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இக்குறும்படத்தினை நினைவில் கொண்டு, அவற்றினை உபயோகப்படுத்தாமல், இது போன்ற தவறான நபர்களிடமிருந்து உங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு அடித்தளமாக உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடினமாக உள்ள உங்கள் பாடத்தை நன்றாக படித்து, அதற்கான கவனத்தை செலுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும். நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போது அங்கும் இதுபோன்ற கும்பல்கள் உங்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல முற்படுவார்கள். அப்போது நீங்கள் இப்போதை பழக்கத்திற்கு அடிமையகமால் உங்களுடைய இலட்சிய சிந்தனையை மனதில் நினைவு கூர்ந்து, அதற்கான முயற்சிகளையும் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைக்கும் சிந்தனையில் உறுதியாக இருந்தால் இதுபோன்ற தவறான பழக்கத்திற்கு ஆளாக மாட்டீர்கள்.

நீங்கள் சமூகத்தில் உயர்ந்த பணிகள், பதவிகளை பெற்று உங்களுடைய எதிர்கால வாழ்க்கையை 27 வயதுக்குள் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள். வேலைக்கான அனைத்து வாய்ப்புகளும் அனைத்து பகுதிகளிலும் உள்ளன. உங்களுடைய குறிக்கோள் அடையவதற்கு இதுபோன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் மனவுறுதியுடன் இருக்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், தலைமையாசிரியர், மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory