» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரூ.499-க்கு 15 மளிகைத் தொகுப்பு: அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்

செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:55:24 PM (IST)



வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப் பொருட்களை ரூ.499 விலையில் விற்பனை செய்யும் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விவசாயப் பெருமக்களின் நலனைப் பாதுகாத்திடவும், பொதுவிநியோகத் திட்டப் பொருட்களைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து பொதுவிநியோகத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திட முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-ல் தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டினைக் கடந்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

தரமான பொருள் நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் இயக்கப்பட்டுவரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழக முதல்வரின் ஆணைப்படி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதல்வர் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு லாப நோக்கமின்றி தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக வரும் பண்டிகைக் காலங்களைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை லாப நோக்கமின்றி ரூ.499 விலையில் அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு என்ற பெயரில் இன்று (அக்.22) சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி துவக்கி வைத்தார். மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

இந்த மளிகைத்தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு விற்பனைத் துவக்க விழாவில், அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory