» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேர் கைது

செவ்வாய் 15, அக்டோபர் 2024 8:33:11 AM (IST)

நெல்லை, தென்காசியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 13 பேரை தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கோட்டை தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் நெல்லை, தென்காசி மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். பாவூர்சத்திரம் சந்தோஷ்நகரைச் சேர்ந்தவர் வடிவேல் என்பவரது மகன் சேர்மத்துரை. இவர் இதே நிறுவனத்தில் 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட மேலாளராக பணியாற்றினார்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவன இயக்குனர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேர்மத்துரை சென்னை வில்லிவாக்கம் பழனி நகர் விரிவு ராஜாஜி நகரைச் சேர்ந்த ராமானுஜம் மகள் கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கரும், திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தாலுகா பூம்புகார் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கரும் விற்பனை செய்தார்.

மேலும் கடையம் பெரும்பத்து கிராமத்தில் நிறுவனத்திற்கு சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்தார். பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் 2 மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்தார்.

இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன் மற்றும் ஆலங்குளம் காந்தி நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சார்லஸ், ஆறுமுகம் மகன் முத்துக்குமார், கடையம் மாதாபுரம் ராஜசேகர் மகன் ஜோசப் பால்ராஜ், மதுரை வக்கீல் சிங்கார வடிவேல், ஆவுடையானூர் ராஜமணி மகன் அருள் செல்வன், முனைஞ்சிப்பட்டி தாமஸ் பாண்டியன் மகன் அமிர்தராஜ், பெத்தநாடார்பட்டி நாகல்குளம் செல்வராஜ் மகன் அமல்ராஜ் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியது. மேலும் சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு, நிலத்தை நிறுவனத்திற்கு திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும், மேலும் ரூ.66.05 லட்சத்திற்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி சேர்மத்துரை நடந்து கொள்ளாமல் நிறுவனத்தை ஏமாற்றினார்.

இதுகுறித்து தனியார் நிறுவன மண்டல மேலாளர் சண்முகசுந்தரம் தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசனிடம் புகார் மனு கொடுத்தார். அதன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நில மோசடியில் ஈடுபட்ட சேர்மத்துரை உள்பட 16 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி விசாரணை நடத்தி சேர்மத்துரை, ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory