» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உயரழுத்த மின் கம்பியில் உரசிய பஸ் : மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாப சாவு
சனி 21, டிசம்பர் 2024 11:25:14 AM (IST)
ஆற்காடு அருகே அருகே சாலையோரம் நிறுத்திய பேருந்து மீது உயரழுத்த மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த போது வழியில் இருந்த டீ கடையில் நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பி பஸ்சின் மேல் தளத்தில் உரசியதாக தெரிகிறது.
இதன் காரணமாக பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் டீ அருந்துவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கிய அகல்யா (20) என்ற பெண் பஸ் கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவரையும் மின்சாரம் தாக்கியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.