» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பஞ்சாயத்து தலைவியை வெட்டிக்கொல்ல முயற்சி : 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
வெள்ளி 11, அக்டோபர் 2024 8:41:26 AM (IST)
பஞ்சாயத்து தலைவியை அரிவாளால் வெட்டிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
நெல்லையை அடுத்த தாழையூத்து பஞ்சாயத்து தலைவியாக கிருஷ்ணவேணி (41) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு செயல்பட்டு வந்தார். அந்த பஞ்சாயத்துக்குட்பட்ட ஓரிடத்தில் சுகாதார வளாகம் கட்டுவது தொடர்பாக அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
கடந்த 13-6-2011 அன்று அப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் கிருஷ்ணவேணி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் திடீரென்று ஆட்டோவை வழிமறித்து கிருஷ்ணவேணியை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.
ெபரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60), சுல்தான் மைதீன் (59), ஆறுமுகம் மகன் கார்த்திக் (34), ஜேக்கப் (33), பிரவீன்ராஜ் (32), விஜயராமமூர்த்தி (34), நடராஜன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு) நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் நடராஜன் இறந்து விட்டார். வழக்கின் இறுதி விசாரணைக்கு பின்னர் சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவீன்ராஜ், விஜயராமமூர்த்தி ஆகிய 6 பேரையும் குற்றவாளிகள் என்று கடந்த 8-ந் தேதி நீதிபதி அறிவித்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேரும் நேற்று மதியம் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தண்டனை விவரங்களை நீதிபதி சுரேஷ்குமார் அறிவித்தார். பஞ்சாயத்து தலைவியை வெட்டிய சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவீன்ராஜ், விஜயராமமூர்த்தி ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வயது முதிர்வு காரணமாக சுப்பிரமணியன், சுல்தான் மைதீன் ஆகியோருக்கான தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், விஜயராமமூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், பிரவீன்ராஜூக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கிருஷ்ணவேணிக்கு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
தண்டனை விவரம் அறிவித்ததும் குற்றவாளிகள் தங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிபதி, ‘‘உங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள்’’ என்றார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார்.