» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கானல்நீரானது சார்மினார் ரயில் நீட்டிப்பு திட்டம்: பயணிகள் ஏமாற்றம்!
வியாழன் 10, அக்டோபர் 2024 3:04:09 PM (IST)
கன்னியாகுமரியிலிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை காணல் நீராக உள்ளதாக பயணிகள் நலச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை, பெங்களூரு, புனே, போன்ற இடங்களுக்கு தினசரி ரயில்கள் புதுடெல்லி, ஹவுரா, கத்ரா, வாரணாசி போன்ற இடங்களுக்கு வாராந்திர ரயில் சேவையும் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் வடக்கே அருகில் உள்ள ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்துக்கு நேரடி எந்த ஒரு ரயில் சேவையும் இல்லாமல் இருந்தது.
இதனால் ஐதராபாத்துக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 2014ம் ஆண்டு வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. ஆனால் தென்மாவட்ட பயணிகள் கன்னியாகுமரியிலிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்படும் மூன்று ரயில்களில் ஒரு ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை நெடுங்காலமாக வைக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு கடுமையாக வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென்மத்திய மண்டலம் சார்பாக தாம்பரத்திலிருந்து ஐதாராபாத் செல்லும் சார்மினார் ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய 2021-ம் ஆண்டு திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்ட கருத்துருக்கு கடந்த இரண்டு வருடங்களாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இந்த ரயில் நீட்டிப்புக்கு எந்த ஒரு பராமரிப்பும் கன்னியாகுமரியில் தேவையில்லை ஐதராபாத்தில் மட்டுமே பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என்று இருந்தும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி இருந்து வந்தனர்.
இதற்கும் அந்த காலகட்டங்களில் தமிழ்நாட்டை தென் மாவட்டத்தை சார்ந்த அதிகாரிதான் ரயில்கள் இயக்கம் பிரிவில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்தார் என்பதும் இந்த காலகட்டத்தில்தான் கேரளாவுக்கு அதிகமான ரயில்கள் இயக்க அனுமதியும் அளிக்கப்பட்டது. தமிழர்கள்தான் தமிழர்களுக்கு எதிராக உள்ளனர். அதே பதவியில் கேரளாவை சார்ந்த அதிகாரி இருந்திருந்தால் இந்த ரயில் கேரளா பயணிகளை பாதிக்காத வகையில் இருந்தால் ஒருசில வேளைகளில் அனுமதி கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் கோட்டம் வாரியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்வே துறை வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்க கூட்டம் நடைபெற்றது இந்த கோரிக்கையை அனைத்து எம்.பி களும் கடுமையாக வலியுறுத்தினர். இந்த கோரிக்கைக்கு பதில் குறிப்பிட்டுள்ள தெற்கு ரயில்வே தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு கோரிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த ரயில் நீட்டிப்பு இன்று வரும் நாளை வரும் என்று இலவு காத்த கிளி போல் தென்மாவட்ட பயணிகள் எதிர் பார்த்து வந்தனர். தற்போது இந்த ரயில் நீட்டிப்பு ரயில்வே வாரியத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழிபாதை பணிகள் முடிந்த நிலையில் இந்த ரயில் நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு தென்மாவட்ட பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
பகல் முழுவதும் சென்னையில்:
தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமானால் காலையில் சென்னை சென்று மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
2008-ம் ஆண்டு திட்டம்:-
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது. இதற்கு செகந்திராபாத் தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரயில்வே கன்னியாகுமரியிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க 2008-ம் ஆண்டே முயற்சி மேற்கொள்ள பட்டதாகவும் அதற்கு கன்னியாகுமரியில் முனைய வசதிகள் குறைவாக இருக்கின்ற காரணத்தை கூறி தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த திட்டத்துக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக ஆண்டு தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் 2008-ம் ஆண்டு காச்சுகுடாவிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க 2008-ம் ஆண்டு நடைபெற்ற ரயில் காலஅட்டவணை மாநாட்டில் வைத்து திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை.
ஒருவழிப்பாதை காரணம்:
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை ஒரு வழிபாதையாக இருக்கின்ற காரணத்தால் 2008-ம் ஆண்டு இந்த ரயில் இயக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் என்று கருத்து நிலவுகிறது. அடுத்த 2010-ம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் ரோசையா அவர்கள் ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து தங்கள் மாநில கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது சென்னை – காச்சிகுடா ரயிலை திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆந்திராவை சேர்ந்த எம்.பி அவர்கள் இந்த கோரிக்கைக்கு பாராளுமன்றத்தில் 2008-ம் ஆண்டு எழுப்பினார். இதற்கு அப்போது செங்கல்பட்டு – திண்டுக்கல் ஒருவழிப்பாதையாக இருக்கின்ற காரணத்தால் ரயில் இயக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே வாரியத்தின் அனுமதி:
இந்த திட்ட கருத்துரு க்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்திய காரணத்தால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் 2021-ம் ஆண்டு அனுமதி அளித்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் ரயில்களில் எளிதாக அனுமதி அளிக்க மாட்டார்கள் ஆனால் இந்த ரயில் கேரளா வழியாக இயங்குவதாக இருந்தால் வெகு எளிதாக 2021-ம் ஆண்டு உடனடியாக அனுமதி கொடுத்திருப்பார்கள்.
தெலுங்கானா கவர்னர்.
கன்னியாகுமரிக்கு பக்கத்து ஊரான அகஸ்தீஸ்வரம் என்ற பகுதியை சார்ந்த பிஜேபி கட்சியில் தமிழக முன்னாள் தலைவராக இருந்த திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக சில காலங்கள் பணியாற்றினார். அவர் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு ஐதராபாத்தில் இருந்து தினசரி ரயில் சேவை இயக்க தென்மத்திய ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் எளிதாக இந்த ரயில் நீட்டிப்பு நிறைவேறிருக்கும்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளதாவது நாங்கள் எங்கள் அமைப்பின் சார்பாக தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக உள்ள திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த ஒரு பயனும் இல்லை.
சார்மினார் ரயில் நீட்டிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே மற்றும் தென்மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில் அறிவித்து இயக்க வேண்டும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் என்று கோரிக்கை விடுக்கின்றது .