» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரண்டரை ஆண்டுகளாக அறிவிப்புடன் நிற்கும் 400 வந்தே பாரத் ரயில்கள்: பயணிகள் ஏமாற்றம்

திங்கள் 7, அக்டோபர் 2024 12:49:11 PM (IST)

இரண்டரை ஆண்டுகளாக அறிவிப்புடன் நிற்கும் 400 வந்தே பாரத் ரயில்களால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் குற்ற்ம்சாட்டியுள்ளது. 

தேசிய தலைநகர் புது டெல்லி செங்கோட்டையில் இருந்து கடந்த 2021-ஆம் வருடம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வழக்கமான உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி கூறியதாவது: ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் நடைபெறும் 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். பிரதமர் 75 வந்தே பாரத் ரயில்கள் அறிவித்து மூன்று அரை வருடங்கள் முடிந்துவிட்டன.  ஆனால் இதுவரை இந்தியாவில் வெறும் 68 வந்தே பாரத் ரயில்கள் தான்  இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் 24, 2023 அன்று, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய வந்தே பாரத் ரயில்கள் பின்வருமாறு: உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இந்த ஒன்பது வழித்தடங்களை சேர்த்து, மொத்தம் 68 வந்தே பாரத் ரயில் சேவைகள் இப்போது நாட்டில் செயல்படுகின்றன.

பட்ஜெட் 2022: மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள்:  2022-23 மத்திய பட்ஜெட்டில், நிதி அமைச்சர் சிறந்த ஆற்றல் திறன் மற்றும் பயணிகள் சவாரி அனுபவம் கொண்ட நானூறு புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாக இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டது. முதலில் அறிவித்த 70 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

இதில் இன்னமும் 400 ரயில்கள் இயக்க வேண்டியுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 300 முதல் 400 ரயில் ரேக்குகள் தேவைப்படும். இதற்கு 400 ரயில்கள் தயாரிக்க ஒரு ரயிலுக்கு 8 முதல் 16 பெட்டிகள் வீதம் மொத்தம் 6000 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் தற்போது இயங்கி வரும் பழைய ரயில் பெட்டிகள் புதிய எல்எச்பி பெட்டிகளாக மாற்றம் செய்து வருகிறார்கள். அதற்கு  தேவையான எல்எச்பி ரயில் பெட்டிகள் இந்த மூன்று ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்க வேண்டும்.

ரயில்வே பட்ஜெட்டை எடுத்து விட்ட பிறகு புதிய ரயில்கள் அறிவித்து இயக்குவதை ரயில்வே துறை வெகுவாக குறைந்து விட்டது. தமிழ்நாடு  போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் புதிய சாதாரண ரயில்கள் அறிவிப்பு அறவே நிறுத்தி விட்டார்கள். சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாதபடி வந்தே பாரத் ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015க்கு முன்பு வரை இவ்வாறு புதிய ரயில்கள் அறிவிப்பதற்கு முன்பு நம்மிடம் உள்ள மூன்று ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்து ஆண்டுக்கு எத்தனை ரயில் பெட்டிகள் தயாரிக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு புதிய ரயில்களை எண்ணிக்கைகளை அறிவிப்பார்கள். ஆனால் தற்போது வாயால் வடைசுடும் பிரதமர் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள் என்றும் நிதியமைச்சர் 400 வந்தே பாரத் ரயில்கள் என்றும் வடைகளை அறிவித்தார்கள்.

தற்போது இயங்கிவரும் 68 வந்தே பாரத் ரயில்களில் சுமார் 10 வழித்தடங்களில் இயங்கிவரும் வந்தே பாரத் ரயில்கள் மிகவும் வருவாய் குறைவாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீதமுள்ள 402 புதிய வந்தே பாரத் ரயில்களில் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் கவனிக்க வேண்டும்.  

தற்போது  தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஒருசில பகுதிகளை தவிர அதாவது நாகர்கோவில், திருநெல்வேலி, திருவனந்தபுரம், மங்களூர், காசரகோடு, மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் புறப்படமாறு  இயக்கப்பட்டு வருகின்றன. இனி திருச்சி – சென்னை, திருச்சி – பெங்களுர், கோவை- திருவனந்தபுரம், நாகர்கோவில் - சென்னை, திருநெல்வேலி – பெங்களுர் , கோவை – மங்களுர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வந்தே மெட்ரோ ரயில்: குறைந்த தூரம் கொண்ட நகரங்கள்;கு இடையே வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எத்தனை இயக்கப்படும் எந்த வழித்தடங்களில் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. வரும் பட்ஜெட்டில் 400 வந்தேபாரத் ரயில்கள் அறிவித்தது போல் 1000 வந்தே மெட்ரோ ரயில்கள் அறிவிப்பு வெளியாகும்

படுக்கை வசதி கொண்ட இரவு நேர வந்தே பாரத் ரயில்: படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முதல் செட் பெட்டிகள் இதுவரை வெளியே வரவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக புலிவருது புலிவருது என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் ஆனால் வந்தபாடில்லை. இந்த ரயில் பெட்டிகள் வெளிவந்த பிறகு பட்ஜெட்டில் மீண்டும் 1000 முதல் 5000 ரயில்கள் அறிவிப்புகள் வெளியாகலாம்" என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital





Thoothukudi Business Directory