» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மழை வெள்ளம் விபரங்களை முன்கூட்டியே அறிய தமிழகம் அலர்ட் அறிமுகம்!
சனி 5, அக்டோபர் 2024 7:45:25 PM (IST)
மழை வெள்ளம் குறித்த விபரங்களை முன்கூட்டியே பொதுமக்கள் எளிதாக தெரிந்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ள "தமிழகம் அலர்ட்" (TN-ALERT) என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் நோக்கில் மழை வெள்ளம் குறித்த விபரங்களை முன்கூட்டியே பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகள் செய்யும் வகையில் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள செயலியான "தமிழகம் அலர்ட்" (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த செயலியில் நாம் இருக்கும் இடத்தின் வானிலை, மின்னல், மழைப்பொழிவு ஆகிய விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் தமிழகம் முழுமையும் அல்லது கன்னியாகுமரி மாவட்டம் முழுமையும் எந்த பகுதியில் மழை வெள்ள பாதிப்பு இருக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டாலே, தங்களது தொலைபேசியில் மழை வெள்ளம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும்.
அதே போல் நீர் தேக்கங்களின் நீர்மட்டம், அபாய எச்சரிக்கை ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, பொய்கை அணை, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைக்கட்டு போன்ற நீர்தேக்கங்களின் மொத்த நீர் அளவு, இருப்பு அளவு மற்றும் தற்போதைய நீர் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழை அளவு, தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்கு உட்பட்டதா? போன்ற விபரங்களை தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். அவ்வாறு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் நின்றிருந்தால் அங்கிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும்.
குறிப்பாக விட்டின் மேல் மாடி (Open terrace) வயல்வெளிகள் போன்ற திறந்த வெளிகளில் இடி மின்னல் தாக்க வாய்ப்பு உள்ளதால், அவ்வாறான இடங்களில் நின்று செல்லிடை பேசியை (Mobile phone) பயன்படுத்த வேண்டாம் இவற்றை எல்லாம் விட முக்கியமாக மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பில் சிக்கிக்கொண்டால் அது குறித்த விபரங்களை உடனே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த செயலியின் மூலம் தெரிவிக்கலாம். அதனால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மழை வெள்ள பாதிப்பு காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைப்பேசி எண். 1077 மேற்படி எண் செயலியில் கொடுக்கப்பட்டு பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி "தமிழகம் அலர்ட்" (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.